"அம்மா... அம்மா..."!
அழைக்கும் மழலையின் ஓசை ஒரு மெல்லிய புன்னகையும் அலுப்பையும் கலந்தளித்ததது எனக்கு.
நான்: "இங்க இருக்கேன் டா குட்டி நாய், அம்மா அப்பா டொய்லெட்லே" என்று பதில் கூறினேன்.
"டுர்ர்ர்..." என்று தனது பொம்மை வண்டியை ஓட்டிக்கொண்டே வந்து - தாள் போடும் வசதியில்லாத, இந்த ஊரில் பொதுவாகவே இப்படி தாழ்போட இயலாது அமைந்திருக்கும் - கழிவறையின் ஸ்லைடிங் டோரை திறந்து எட்டிப்பார்த்தான் என் மகன்.
மகன்: "வாட் ஆர் யு டூயிங்?" (என்னம்மா பண்ற) என கேட்டான்.
எப்போதும் போல அவன் ஆங்கலத்தில் பேச நான் தமிழில் பதிலளிக்க எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
நான்: "ப்லேன் ஓடிட்ருக்கேன்" என்று வேடிக்கையாக பதிலளித்தேன்.
அதற்கு தனது அழகிய கருவிழிகளை சுருக்கி மிகவும் சீரியஸ் ஆக பிஞ்சுக் கைகளை அசைத்து
மகன்: "நோ யு ஆர் நாட், யு ஆர் டூயிங் பூஃ பூஃ" (இல்ல நீ ஆய் போற) என விவரித்தான்.
நான்: "தெரியுதுல்ல அப்பறம் என்ன கேள்வி இது" என்று நான் சிரித்ததும் அம்மா தன்னுடன் விளையாடுகிறாள் என்று புரிந்து கொண்டு தான் வந்த காரணத்தை கருத்தாய் விவரிக்க தொடங்கினான்.
இப்பொது அவன் 3 வயது இளம் கற்பனையில் அந்த பொம்மை வண்டி என்ன வடிவெடுத்து, அவன் சூப்பர் ஹீரோவாக எல்லோரையும் காப்பாற்றுவதற்கு எப்படி உதவிக்கொண்டிருக்கிறது என்று ஒரு கதையை பகிர்ந்து கொண்டிருந்தான்.
பொறுமையாக கேட்டுவிட்டு சரியான இடங்களில் இடையிடையே "ஓ வாவ்" என்றெல்லாம் அவனை பார்த்து கூறி, அவன் நான்சொல்வதைக் கேட்பதற்கு தயாராகும் நிலைக்கு கொண்டு வந்தேன்.
நான்: "அம்மா பூஃ பூஃ முடிச்சுட்டு வந்து விளையாடறேன், நீ கதவை அடிச்சிட்டு வெளியே உக்காந்துக்கோ" என்று கூறிக்கொண்டே என் கைக்கருகில் இருக்கும் கப்போர்டு கதவை திறக்க ஆரம்பித்தேன். அதை கண்டதும்...
மகன்: "வாட் ஆர் யு டூயிங்" (என்னம்மா பண்ற) என மறுபடியும் கேள்விகள் தொடங்கின.
நான்: "அம்மாவுக்கு "பீரியட்" (மாதவிடாய்) வந்துடுச்சுடாமா அதான் டாம்போன் எடுக்குறேன்" எனக்கூறியதும் அவன் தனக்குப்புரிந்ததை எப்போதும் போல ஒருமுறை என்னிடம் விவரித்தான்...
மகன் : "ஓ யு காட் பீரியட்?" (ஓ உனக்கு பீரியட் வந்துவிட்டதா?)
நான்: ஆமாம்டாமா.
மகன் : "யூ ஹாவ் பிளட் கமிங் அவுட் ?" (உனக்கு இரத்தம் வருதா?)
நான்: ஆமாம்டாமா
மகன் : "இஸ் யுவர் வீஸ் கோயிங் டு பீ ஆல் பிளட்" (அப்போ உனக்கு உச்சாவெல்லாம் இரத்தமமாய் போகுதா?)
நான்: இல்லடா மா, "டூ யு ரிமெம்பெர்?" (உனக்கு ஞாபகம் இருக்கா?), நான் என்ன சொல்லிக்குடுத்தேன்?
கிர்ல்ஸ்க்கு (பெண்களுக்கு) 3 ஹோல்ஸ் (துவாரம்/திறப்பு/ஓட்டை) இருக்கும்
முன்னால் "வீஸ் ஹோல்" (ஒன்று சிறுநீருக்கு) , நடுவில் உள்ளே "பேபி ஹோல்" (குழந்தைக்கு) , பின்னால் ஒரு "பூஃ பூஃ" ஹோல் (மலத்திற்கு)
மகன்: பாய்ஸ் ஒன்லி ஹாவ் 2 ஹோல்ஸ்? (ஆண் பிள்ளைகளுக்கு 2 தான் இருக்குமா?)
நான்: "கரெக்ட், யூசுவலி, பாய்ஸ்க்கு 2 ஹோல்ஸ் தான் இருக்கும். "1 பார் வீஸ், 1 பார் பூஃ"
(பொதுவாக ஆண்களுக்கு 2 தான் இருக்கும், ஒன்று சிறுநீரிற்கு, ஒன்று மலத்த்திற்க்கு)
மகன்: "பாய்ஸ் டோன்ட் ஹாவ் பேபி ஹோல்?" (ஆண் பிள்ளைகளுக்கு குழ்நதைக்கென்று திறப்பு இல்லையா?)
நான்: யூசுவலி (பொதுவாக), அம்மா மாதிரி பெரிய பொண்ணுங்களுக்கு தான் வயித்துல பாப்பா வரும். அந்த பாப்பா வெளில வர்றதுக்கு ஹோல் (திறப்பு) வேணுமில்ல, அதான்.
இப்போ அம்மாவும் அப்பாவும் ஒரு பாப்பா செஞ்சிட்டோம், அதான் நீ. எங்களுக்கு இன்னொரு பாப்பா பண்ண விருப்பம் இல்ல. அதனால பாப்பா செய்வதற்கு தேவையான அம்மாவின் முட்டை, மாதத்திற்கு ஒருமுறை உடைந்து வெளியேறும். அது அந்த பேபி ஹோல் வழியா போயிடும்.
முடிஞ்சா அப்புறமா மம்மி டாடி இல்லாத ஒரு பாப்பாவை நம்ம கூட்டிட்டு வந்துக்கலாம்.
மகன்: "நாட் எ பேபி. எல்டெர் பிரதர் ஆர் எல்டெர் சிஸ்டர், வி கேன் பிரிங். பேபீஸ் பூஃ பூஃ இன் தெயர் நாப்பி, இட் இஸ் ஸ்மெல்லி"
(பாப்பா கொண்டுவரவேண்டாம் , அண்ணாவோ அக்காவோ கொண்டுவருவோம். பாப்பான்னா அதன் ஜட்டியிலேயே உச்சா ஆய் எல்லாம் போகும். நாத்தமடிக்கும்)
என்று மூக்கை சுருக்கி விவரித்தான்.இன்னுமே இரவுகளில் சிறுநீருக்காக நாப்பி அணிந்துகொள்ளும் இந்தப் பிஞ்சு பாப்பாக்கள் நாப்பியில் ஆய் போகும் அதனால் வேண்டாம் என கூறுவது வேடிக்கையாக இருந்தது.
மற்றும் மிக சிரிதிலிருந்தே முடிந்தால் இன்னொரு பிள்ளையை தத்தெடுப்போம் என்று கூறிவந்ததனால் அது அவனுக்கு இயல்பாக இருப்பது மகிழ்ச்சி அளித்தது.
நான்: கண்டிப்பா. இப்போ அம்மா டாம்பொன் (பஞ்சு உருளை) வெச்சிட்டு வர்றேன். நீ போ.
என்று கூறி அவனை அனுப்பி வைத்தேன்.
அவன் அந்த கதவிற்கு அப்புறம் அமர்ந்து கொண்டு தன் விளையாட்டை தொடர்ந்தான்.
நான்: ஆ
அவன்: "என்னம்மா ஆச்சு, எதற்கு ஆ வென்றாய்" (வாட் ஹாப்பேண்ட் அம்மா, வொய் டிட் யு மேக் தி 'ஆ' சவுண்ட்) என விவரமாய் கேட்டான்.
நான் எனது டாம்பொனை பொருத்திக்கொண்டிருக்கும்போது மெதுவாய் 'ஆ' வென்று சத்தமிட்டிருக்கிறேன் என்பது அவனது கேள்விகள் தொடரவே நான் உணர்ந்தேன்.
நான்: ஒண்ணுமில்லடாமா டாம்பொன் வைக்கும்போது ஒரு கிளாட் (கட்டியான இரத்தம்) வந்திருக்குனு நினைக்கிறேன் அதான் வலிச்சிருக்கு அம்மாக்கு.
அவன்: "கிளாட்? வாட் ஐஸ் தட்?" (அப்படினா?)
நான்: ரத்தம் சில நேரம் கட்டியாய் வரும். அது பேரு கிளாட். அது கொஞ்சம் வலிக்கும். இது அம்மாவுக்கு ரொம்ப நார்மல் (சாதாரணம்) டாமா என்று விவரித்தேன்.
அவன்: "ஓ! இட்ஸ் ஓகே அம்மா, ஐ ஆம் தேர் பார் யூ. யு வில் பி ஆல் ரைட் சூன்".
(ஓ! ஒண்ணுமில்லமா, நானிருக்கேன் உனக்கு. உனக்கு சீக்கிரம் செரி ஆயிடும்)
நாங்கள் அவனுக்கு ஏதொன்று காயமோ வலியோ ஏற்பட்டால் என்ன கூறி சமாதானம் செய்வோமோ அதை அப்படியே எனக்கு கூறுகிறான் என்பது தெரிந்தாலும் அந்த பிஞ்சு வார்த்தைகள் மிகவும் இதமாய் இருந்தது.
நான்: தேங்க்ஸ்டாமா.
அவன்: "இட் லூக் லைக் ஜாம்" ஹா ஹா ஹா (ஜாம் போல இருக்கு) என்று எனது கையில் இருக்கும் டிஸ்ஸுவை கண்டுவிட்டு சிரித்தான்.
"விவரம் அறியா குழந்தைபருவம்" என்று நாம் கூறும் இந்த பருவத்தில் குழந்தைகள் எந்தவொரு சமூக வழி புகுத்தப்படும் அருவருப்போ பயமோ இன்றி முழுக்க முழுக்க ஒரு ஆர்வம் (கூறியோசிட்டி) மட்டுமே காட்டுகிறார்கள் என்பது நான் இவனுடன் இருக்கும் தருணங்களில் மிகவும் உணருகிறேன்.
நான்: ஹா ஹா ஹா ஜாம் போல இருக்கா பார்க்க உனக்கிது?! செரி போய் விளையாடு அம்மா கை கழுவிட்டு இரண்டு நிமிஷத்தில் வந்திடுறேன்.
அவன்: ஓகே!
இங்கே என் சூழலிலுமே என் மகன் அவனது தொடக்கப்பள்ளியிலோ விளையாடும் இடங்களிலோ இதை எல்லாம் பேசிவிட கூடாது என்று புரிய வைத்திருக்கிறேன்.
நாங்கள் இப்படி வளர்க்கிறோம் என்பதற்க்காக எல்லோரும் இதை புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதை அறிந்து தான் அவனிடம் அம்மா அப்பா மற்றும் அவன் மட்டுமே 'டாய்லெட் டாக்ஸ்' (அதாவது - குளிப்பது, மலம் கழிப்பது, வாயு பிரிதல், மாதவிடாய், உடல் உறுப்புகளை பற்றி பேசுவது, காட்டுவது, கழுவுவது என்பன) அல்லது டாய்லெட் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று அவன் இப்போது அறிவான். ஏனென்றால் எல்லோருக்கும் இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவதோ பகிர்வதோ பிடிக்காது என்று தெளிவு படுத்தியிருக்கிறேன்.
இதன் தொடர்பிலே 'குட் டச்', 'பேட் டச்' போன்றவையும் தெளிவு படுத்த வாய்ப்பு கிடைத்தது.
சிறு பெண்ணாய் இருக்கும் போதிலிருந்தே பெண் குழந்தையை பெற்றோ அல்லது தத்தெடுத்தோ அதற்கு எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி சொல்லி கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
நாளடைவில் பெண்களையும் விட ஆண்களுக்கு இவையெல்லாம் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம் என்று புரிந்தது.
வெளி நாட்டிலே வாழும் சூழ்நிலை ஏற்பட்டதில் இங்கே இருக்கும் குழந்தை வளர்ப்பு முறைகளில் சிலவும் இப்படி விவரமாய் கற்றுக்கொடுப்பது நன்று என கூறுகின்றன என படிக்க எல்லா இடங்களிலும் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்து எங்களுக்கு தெரிந்த முறையில் வளர்க்க முடிவெடுத்ததோம்.
இதில் எனது கணவர் என்னுடன் வாழ்ந்த இத்தனை காலங்களில் (மற்றும் அடிப்படையாகவே தனது தாய் மற்றும் அக்காவிடம் பிரியமாகவும் அன்புடனும் வளர்திருந்ததால்) இந்த எண்ண போக்குகளுக்கு அடிவேர் போன்று உறுதுணையாக இருப்பது எனக்கு சாதகமான ஒரு மிக முக்கிய காரணம்.
இப்படி ஆண் பிள்ளைகள் வலி இரத்தம் பெண் உறுப்புகளின் பெயர்களும் பொருட்களும் அறிந்து வளர்ந்தால் நாளை பழகும் பெண்களின் ஆடைகளோ உடலோ அவர்களை ஆபாசமாய் பார்க்கச்செய்யாது என்பது உண்மை.
மாதா மாதம் வரும் பீரியட்டை (இரத்தப்போக்கை) பெயர் சொல்லி பேசுவது அல்லது டாம்போன் (பஞ்சு உருளை), பாடோ (பஞ்சு பட்டை), கப்போ (மாதவிடாய் கோப்பை) அல்லது எந்த பீரியட் சார்ந்த பொருட்களையும் கூச்சத்துடன் வாங்கி கருப்பு பிளாஸ்டிக் பையில் மறைத்து வீட்டு டாய்லெட் டில் கூட அடுத்தவர் கண்ணில் படாமல் உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் - இதெல்லாம் மாறவேண்டும் என்றால் நம் வீடுகளில் இருக்கும் ஆண்களும் பெண்களும் பெரியவர் முதல் சிறியவர் வரை இதை ஒரு சாதாரண நிகழ்வாயும் அதிலிருக்கும் வலியோ கஷ்டங்களோ என்ன என்று பகிர்ந்து பேசினாலே தீரும்.
அனால் நம் வீட்டு பெரியவர்களை மாற்ற சொல்வதை விட சிறியவர்களுக்கு கற்றுக்கொடுப்பது சுலபம்.
பெரியவர்கள் முன் பேச இயலாது என்றால் அதையும் தெளிவாய் இதெல்லாம் தாத்தா பாட்டிக்கு (அல்லது உங்கள் வீடுகளில் எந்த நபரோ அவரை குறித்து) முன் பேசாதடா கண்ணா. அவங்களுக்கு இதெல்லாம் புரிந்து கொள்வது கடினம். அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளும் காலமும் வேறு என்று விவரிக்கலாம். நாம் எதிர்பார்ப்பதை விடவும் குழந்தைகள் தன்மையாக கூறினால் புரிந்து கொள்கிறார்கள் என்பது நான் கவனித்த உண்மை.
நாளை என் மகன் வளர்ந்து அவனருகில் இருக்கும் அனைவருக்கும் உகந்த மதிப்பும் புரிதலுடனும் பழகுவான் என்று நம்புகிறேன்.
இவனிடம் இருந்து இவனை சாரத்தோருக்கும் இந்த பண்பு வளரும் என்றும் நம்புகிறேன்!